யானை மிதிச்சு பாகன்கள் சாகுறது கேரளாவுக்கு புதுசு இல்லே. அப்படி ஒரு சோக சம்பவம்தான் இதுவும். வேதனை என்னவென்றால், பாகனின் மரணத்தை பக்கத்தில் இருந்து பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் ஐஸ்வர்யராய்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே இருக்கிறது அதிரப்பள்ளி காட்டுப்பகுதி. இங்கே ராவணா படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். இதில் நடிக்க சில யானைகளும் வரவழைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணி சுமாருக்கு யானை ஒன்றுக்கு மதம் பிடித்தது. அடக்க போன பாகனை அது காலால் மிதித்து கொன்றது. அப்போதும் ஆத்திரம் தீராமல் இருந்த யானையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அதிர்ந்து போனதாம் மொத்த யூனிட்டும். காருக்குள் ஏறிக் கொண்ட ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும், இடத்தை விட்டு அகன்றுவிடலாம் என்று நினைத்தாலும் நடக்கவில்லை. வழியிலேயே நின்று கொண்டிருந்தது யானை. சில மணி நேரங்கள் இந்த சிக்கல் நீடித்ததாம்.
அதற்குள் திருச்சூரிலிருந்து வந்த மருத்துவர்கள் யானையின் மீது மயக்க ஊசியை தூரத்திலிருந்தே பாய்ச்சினர். இதனால் யானை மயக்கமுற்றது. அதன்பின் அங்கிருந்து ஐஸ்-அபிஷேக் ஜோடி தப்பி வந்தார்களாம். அடுத்த சில நிமிடங்களில் செய்தி காட்டு தீ போல பரவ, பாலிவுட், கோலிவுட் ஏரியாக்களில் பலத்த அதிர்ச்சி.
என்றாலும், படப்பிடிப்பை அதே இடத்திலேயே தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.

No comments:
Post a Comment